எம்மைப்பற்றி
யாழ்வகற்பத்திற்கு மேற்கு பக்க பாக்கு நீரிணையில் அமைந்துள்ள பலசிறப்புமிக்சிறு தீவுகளான நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, காரைதீவு(காரைநகர்)புங்குடுதீவு, லைடன்தீவான ஊர்காவற்றுறை, வேலணை,அல்லைப்பிட்டி, மண்டதீவு போன்ற தீவுகளை தீவகம் என்ற பெயரால் அழைப்பர் எமது பிரதேசம் 16 மைல் சுற்றளவுடைய ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட J/51 கிராமசேவையாளர் பிரிவைக்கொண்ட சிற்றூரே பருத்தியடைப்பாகும். காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு முற்பட்ட காலப்பகுதியில் இருந்து மிகச்சிறந்த வணிகர்களாக விளங்கி வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டவர்களாக திகழ்ந்த எமது முன்னோர் கூடுதலாக தூத்துக்குடி, ஜனாபட்டனம், நாகபட்டனம், பர்மா(மியான்மார்),சிங்கப்பூர் போன்றநாடுகளுக்கு பாய்மரக்கப்பலில் சென்று வணிகம் செய்து வந்தனர். இங்கிருந்து முத்துச்சிப்பி, முத்துச்சங்கு, இரத்தினகற்கழுடன் அரும்பொருட்களான கடல் பொக்கிசங்களையும்,தெங்கு பொருட்களையும் பிறநாட்டுக்கு ஏற்றிச்சென்று வணிகம் செய்துவிட்டு அங்கிருந்து நல்லின மாடுகளையும், செம்மறி ஆடுகளையும் அத்துடன் மா,சீனி,தீப்பொட்டிகள்,ஓடுகள் போன்ற பல பொருட்களை ஏற்றிவந்து வணிகம் செய்வது வழக்கமாக இருந்தது.பெருட்களை ஏற்றிவந்ததுடன் பல கலைகளையும் கொண்டுவந்து இசைக்கலையுடனும், நடனக்கலையுடனும் இணைந்து வாழப் பழகிக்கொண்டனர்.அதிக வசதி படைத்தவர்களரக இவர்கள் இருந்ததன்காரணமாக இவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறை செலுத்தியதனால். இவர்கள் பிள்ளைகள் பலர் சங்கீத வித்துவான்களாகவும், இசைக்கருவிகள் வாசிக்கும்(வயலீன், வீணை, மிருதங்கம், தபேலா, கடம்) கலைத்துறைவித்துவான்களாகவும். சிற்பக்கலை, ஓவியக்கலை சோதிடக் கலை , சமயக் குரவர்களாகவும், ஆசிரியராகவும், வைத்தியர்களாகவும், பல முக்கிய அரசு சார்ந்த துறைகளிலும் உருவாக்கம் பெற்றனர்.வணிக நிமித்தம் அடிக்கடி இந்தியா செல்வதனால் இவர்களின் பிள்ளைகள் பலர் இந்தியாவிலேயே கூடுதலாக படித்து பட்டங்கள் பெற்றனர். இவர்கள் கண்ணகியம்மனுக்கும், பிள்ளையாருக்கும் வழிபாட்டுத் தலங்களை உருவாக்கிகுலதெய்வமாக வழிபட்டு அதன் சுற்று வட்டாரத்திலும் ஊருண்டியிலும், காவலூர் துறைமுகத்திற்கு அருகிலும் வாழ்ந்த இவர்கள் பிற்பட்டகாலப்பகுதியில் பாய்மரக்கப்பல்களையும், டிங்கிகளையும் பாதுகாப்பதற்காகவும்,காவலூர் துறைமுகத்தை நெருங்கியே வேலைகள் அதிகம் இருந்ததனாலும் காவலூர் துறைமுகத்திற்கு அருகில் நெருங்கி வாழத்தொடங்கினார்கள். அங்கு கதிரேசன் கோவிலையும் இந்து சபையினால் இரன்டு வகுப்புக்களை கொன்டு இயங்கிவந்த பாடசாலையை ஜந்து வகுப்புக்கள்கொன்ட கதிரேசானந்தா வித்தியாலயத்தையும், சனசமூக நிலையத்தையும் உருவாக்கினார்கள் இவர்களின்வழி வந்த உறவுகளின் பிள்ளைகள் கதிரேசானந்தா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியைக் கற்று பின்பு சண்முகநாதன் மகா வித்தியாலயத்திலும் சிலர் புனித அந்தோனியார் கல்லூரியிலும் ,வேலணை மத்தி மகா வித்தியாலயத்திலும் யாழ்ப்பாண பாடசாலைகளிலும் கல்வி பயின்றனர். பிற்பட்ட காலப்பகுதியில் கடல் கடந்து வணிகம் செய்வதை அரசாங்கம் தடை செய்ததாலும், அரசாங்கம் இயந்திர கப்பல் மூலம் பொருட்களை இறக்குமதி செய்ததாலும் இவர்களால் வணிகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதன் காரணமாக பாய்மரக்கப்பல்களிலும் டிங்கிகளிலும் அரசாங்கம் இயந்திரகப்பலில் கொண்டுவரும் பொருட்களைகரைக்கு கொண்டுவரும் பணிகளை செய்யத்தொடங்கினர். பின்பு பாய் மரக்கப்பல்களையும், டிங்கிகளையும் சிறுதாக்கி (அதை வத்தை என்று கூறுவார்கள்) யாழ்ப்பாணத் துறைமுகத்திற்கும்,காங்கேசன் துறைமுகத்திற்கும் வரும் கப்பல்களின் பொருட்களை கரையில் சோ்க்கும் பணிகளை செய்து வந்தனர்.அத்துடன் சிலர் முத்துச்சங்கு, முத்துச்சிப்பி,கடல் திரவியங்கள் போன்ற அரும் பொருட்களை கடலோடி தேடி எடுக்கும் வேலைகளை செய்து வந்தனர். நாட்டுச் சூழல் காரணமாக புலம் பெயர்ந்து பல நாடுகளிலும் பரந்து சிறந்த கல்விமான்களாகவும் சிறந்த வணிகர்களாகவும் சிறந்து வாழ்ந்து வருகிறார்கள் .